ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

திருச்சி: திருச்சியில் தி.மு.க., மாநாடு நாளை நடப்பதை முன்னிட்டு தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களிடம் பேசியதாவது: இந்தியாவின் ஒற்றுமை, மதவாதம், ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றை முன்வைத்து வரும் லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வோம். விஜயகாந்த் பிடி கொடுக்காமல் இருக்கிறார். இவர் ஒரு ஸ்டண்ட் நடிகர். எதிரிகளுக்கு பிடி கொடுக்காமல் இருப்பது போல் விஜயகாந்த்தும், கூட்டணி அழைப்பிற்கு பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார். நான் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளேன். தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் எங்கள் அணியில் இணைவது போல் விஜயகாந்தும் தமது அணிக்கு வருவார் என்ற எனது நம்பிக்கை வீண் போகாது என கருதுகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:


சோனியா-கனிமொழி சந்திப்பின் பின்னணி என்ன?

சமீபத்தில், கனிமொழி உடல் நலம் சரியில்லாமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, திரும்பினார். இந்த செய்தியை பத்திரிகைகள் பெரிதாக வெளியிட்டன. இதனால், அதை பற்றி அறிந்து கொள்ள சோனியா விரும்பினார். அதனால் தான் கனி மொழி சோனியாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை.

2ஜிவை வைத்து காங்., மிரட்டுகிறதா?

இது குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியை வைத்து அவ்வாறு பொதுமக்கள் கருதுகின்றனர். ஆனால், அடிப்படை உண்மை என்ன என்று எனக்கு தெரியாது.

தி.மு.க.,வின் நிதிநிலை சரியாகிவிட்டதா?

கட்சியின் நிதிநிலை பெருகி வருகிறது. ஆனால், முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு சரியாகவில்லை.

மத்தியில் அடுத்து யார் ஆட்சி அமையும்?

அணிகள் மாறுவதற்கும், அதன் காரணமாக ஆட்சி மாறுவதற்கும் மக்களின் எண்ணம் மாறுதல் அடிப்படையில் மறுப்பதற்கு இல்லை. திட்டவட்டமாக எந்த கட்சி இந்தியாவில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று சொல்ல முடியாது. சொல்லவும் விரும்பவில்லை.

2ஜி குற்றசாட்டு குறித்து உங்கள் கருத்து என்ன?

2ஜி விவகாரம் அப்பொழுது பூதாகரமாக, கொட்டைஎழுத்துக்களில் வெளியிடப்பட்டது. 80, 90 ஆயிரம் கோடி ரூபாய் என்ற தொகை என்று வெளியான தகவல்கள் எல்லாம், வெடித்த பலூனை போல இப்போது சுருங்கி போனது.

தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதா?

4.5 சதவீதமாக ஆகியிருக்கிறது. 2014.2015ம் ஆண்டு பட்ஜெட்டில், வளர்ச்சி விகிதம் மிகவும் கவலைக்கிடமான முறையில் தமிழகத்தில் அமைந்துள்ளது. இதை நான் புள்ளிவிவரங்களுடன் கூறி உள்ளேன்.

தே.மு.தி.க., உங்கள் அணிக்கு வருமா?

தே.மு.தி.க., விஜயகாத் ஒரு ஸ்டண்ட் நடிகர். சண்டை காட்சிகளில் பிடி கொடுக்கமாட்டார். அதுபோலவே, கூட்டணி விஷயத்திலும் பிடி கொடுக்காமல் இருக்கிறார். அவரும், அவருடைய கட்சியும் தி.மு.க., கூட்டணியோடு இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை நான் இரண்டொரு முறை குறிப்பிட்டிருக்கிறேன். தமிழக மக்களை இன உணர்வோடும், ஒற்றுமையோடும் வாழ வைக்க வேண்டும் என்ற அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எங்கள் அணிக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். எனது நம்பிக்கைக்கு விஜயகாந்த்தும் விதிவிலக்கல்ல.

ஜெ.,மீது வழக்குள்ள நிலையில் கம்யூ.,கள் கூட்டணி வைத்துள்ளார்களே?

இது அரசியல் அடிமைத்தனம்.

தேர்தல் பிரசாரத்தில் எந்த கருத்தை முன்நிறுத்துவீர்கள்?

இந்திய நாட்டு ஒற்றுமையை, மதவாதமற்ற தன்மையை, ஊழல் அற்ற நிர்வாகத்தை, மற்றவர்களை மதித்து, அரசியல் நடத்த தெரிந்த, அண்ணதுரையின் கொள்கையை மையமாக வைத்து, நாங்கள் லோக்சபா, சட்டசபை தேர்தல்களிலும் பிரசாரம் செய்வோம்,

கட்சியில் தண்டிக்கப்பட்டவர்கள் மன்னிக்கப்படுவர்களா?

மன்னிக்கப்படுவது போல் நடந்து கொண்டால் மன்னிக்கப்படுவார்கள்.

பார்லி.,யில் மிளகாய்பொடி வீச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?

பல ஆண்டு காலமாக சட்டமன்ற, பாராளு மன்ற ஜனநாயகத்தை உருவாக்கி, வெற்றி கரமாக நடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள உறுப்பினர்களாலேயே, அது பாழ்படுத்தப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் பதவி மீது உங்களுக்கு ஆசை உண்டா?

என்னுடைய உயரம் எனக்கு தெரியும் .

3வது அணி குறித்து உங்கள் கருத்து என்ன?

கருத்து கூற விரும்பவில்லை.

இந்த மாநாட்டில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்களா?

மவுனம் தான் இந்த கேள்விக்கு பதில்.

இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக